கோலாலம்பூர், நவ. 28 - கிழக்கு கரை மாநிலங்களான கிளந்தான் மற்றும்
திரங்கானுவில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகிறது. இன்று
காலை நிலவரப்டி வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
உயர்வு கண்டுள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் நேற்றிரவு 8.00 மணிக்கு 21,568 ஆக இருந்த
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 29,023
பேராக உயர்வு கண்டது.
பாசீர் மாஸ் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 11,698 பேர் 40
தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள வேளையில் தானா மேரா
மாவட்டத்தில் 3,224 பேர் 22 நிவாரண மையங்களிலும் பேரும் கோல
கிராய் மாவட்டத்தில் 2,826 பேர் மையங்களிலும் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையின் பேரிடர் மேலாண்மை
அகப்பக்கம் கூறியது.
இவை தவிர பாசீர் பூத்தே, தும்பாட், கோத்தா பாரு, பாச்சோக், மாச்சாங்
ஆகிய மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்
அப்பகுதிகளைச் சேர்ந்த அனைவரும் துயர் துடைப்பு மையங்களுக்கு
மாற்றப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
திரங்கானு மாநிலத்திலும் வெள்ளம் தொடர்ந்து மோசமடைந்து வரும்
வேளையில் நேற்றிவு 3,768 பேராக இருந்த வெள்ள அதிகதிகள்
எண்ணிக்கை இன்று காலை 8,215ஆக அதிகரித்தது.
வெள்ளத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பெசுட் மாவட்டத்தில் 838
குடும்பங்களைச் சேர்ந்த 3,205 பேர் 51 தற்காலிக வெள்ள நிவாரண
மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர் என்று மாநில பேரிடர்
மேலாண்மை செயல்குழு கூறியது.
இதனிடையே, கெடா மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 197 குடும்பங்களைச்
சேர்ந்த 569 பேராக உயர்வு கண்டது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 16
குடும்பங்களைச் சேர்ந்த 52 பேராக மட்டுமே இருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
குபாங் பாசு மற்றும் சிக் மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும்
ஏழு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொது
தற்காப்பு படையின் கெடா மாநில துணை இயக்குநர் மேஜர் முகமது
சுஹைமி முகமது ஜைன் கூறினார்.


