ஜெர்தே, நவ. 28 - சாலையில் விழுந்த தென்னை மரம் மீது மோட்டார்
சைக்கிள் மோதியதில் அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் இங்குள்ள கம்போங் அப்பாலில் நேற்று அதிகாலை நிகழ்ந்தது.
முகமது ஷூக்ரி மாட் ஹூசேன் (வயது 27) என்ற அந்த இளைஞரை பலி
கொண்ட இந்த விபத்து தொடர்பில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில்
தாங்கள் புகாரைப் பெற்றதாக பெசுட் மாவட்ட இடைக்கால போலீஸ்
தலைவர் டிஎஸ்பி முகமது சானி சாலே கூறினார்.
அந்த ஆடவர் ஹோண்டா வேவ் ரக மோட்டார் சைக்கிளில் வேலைக்குச்
சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை அடைந்த போது தென்னை மரம் ஒன்று திடீரென
சாலையின் குறுக்கே விழுந்தது. தவிர்க்க இயலாத நிலையில்
அவ்வாடவர் அம்மரத்தின் மீது மோதினார் என்று அவர் அறிக்கை ஒன்றில்
குறிப்பிட்டார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருவதாக அவர் சொன்னார்.
சாலைகளில் குறிப்பாக மழை காலத்தின் போது மிகுந்த எச்சரிக்கையுடன்
பயணிக்கும்படி வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார்.


