ஷா ஆலம், நவ. 28- நான்கு கண்காட்சிகளை ஒன்றிணைக்கும் சிலாங்கூர்
கல்வி உச்சநிலை மாநாடு (எஸ்இஎஸ்) ஆயுள் முழுவதும் கற்கும் மாநில
அரசின் திட்டத்தை வலுப்படுத்தும்.
இந்த துறை மத்திய அரசின் கீழ் இருந்த போதிலும் சமூக பொருளாதார
சவால்களையும் நவீன தேவைகளையும் எதிர்கொள்ள இது அவசியம் என
மாநில அரசு கருதுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
கல்வியை வகுப்பறைக்குள் மட்டும் வரையறுத்துவிட முடியாது.
செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், உணவு உத்தரவாதம்,
புவிஅரசியல் உள்பட உலகில் நிகழ்ந்து வரும் மாற்றங்களுக்கு ஏற்ப
நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.
இந்த சவால்களை திறந்த மனதுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதோடு
எதிர்கால தலைமுறையினரை தயார் செய்வதில் முதன்மை தீர்வாக
கல்வி விளங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அவர்
வலியுறுத்தினார்.
நேற்று இங்கு 2024 சிலாங்கூர் அனைத்துலக புத்தக கண்காட்சியின்
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கண்காட்சியை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
செயற்கை நுண்ணறிவு துறையில் ஆளுமையை வலுப்படுத்துவதற்கு
ஏதுவாக சிலாங்கூர் அரசு ஆப்பிள், சீமேன்ஸ், ஃபெஸ்தோ, டெசால்ட்
சிஸ்டம்ஸ், கே.என்.எக்ஸ், மேண்டிக்ஸ் போன்ற நிறுவனங்களுடன்
கூட்டுத் திட்டங்களை தொடக்கியுள்ளது என்று அமிருடின் குறிப்பிட்டார்.
அடுத்தாண்டு நாம் கூகுள் நிறுவனத்துடன் ஒத்துழைப்பை
வலுப்படுத்தவிருக்கிறோம். மனித மூலதனத்தை வலுப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனம் சிலாங்கூரில் தரவு மைய உருவாக்கத்திற்காக முதலீடு செய்துள்ளது என்றார் அவர்.


