ஷா ஆலம், நவ 27: இந்த ஆண்டு முழுவதும் சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் மூலம் மொத்தம் 6,991 குடியிருப்பாளர்கள் இலவச சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொண்டதாகப் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதில் 46 முதல் 64 வயதுக்குட்பட்ட குடியிருப்பாளர்கள் அதிகமாக பங்கேற்றுள்ளனர். அதாவது 38 சதவீதம் அல்லது 2,673 பங்கேற்பாளர்கள் இலவச சுகாதாரப் பரிசோதனை மேற் கொண்டுள்ளனர் என ஜமாலியா ஜமாலுடின் விளக்கினார்
"சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் மொத்தமாக 73 சதவீதம் அல்லது 5,080 பெண் பங்கேற்பாளர்கள் உள்ளனர், மீதமுள்ள 27 சதவீதம் பேர் (1,911) ஆண்கள் ஆவர்," என்று அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் வயது மற்றும் பாலினம் அடிப்படையில் சிலாங்கூர் சாரிங் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அறிய விரும்பிய மேரு சட்டமன்ற உறுப்பினர் மரியம் அப்துல் ரஷிட்டின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இதற்கிடையில், பெவிடல் என்ற அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) நடத்தும் முதியோருக்கான சிறப்பு சுகாதார பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஜமாலியா மாநில அரசிடம் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு முக்கிய அளவுகோல் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் என்று அவர் கூறினார்.


