ரியோ டி ஜெனிரோ (பிரேசில்), நவ 27: பிரேசிலுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மேற்கொண்ட முதல் பயணமானது அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு RM6.8 பில்லியன் (US$1.57 பில்லியன்) ஏற்றுமதி திறனை வெற்றிகரமாக உருவாக்கியது.
பிரேசிலில் உள்ள 28 முன்னணி நிறுவனங்கள் மற்றும் வணிக கார்ப்பரேட் மற்றும் தொழில்துறை தலைவர்களுடனான கலந்துரையாடல் விளைவாக ஏற்றுமதிக்கு சாத்தியமான கூறுகள் இருப்பதாக நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார் கூறினார்.
"இது 58 தொழில்துறை தலைவர்களை உள்ளடக்கியது. இந்த கூட்டத்தின் மூலம் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு RM6.8 பில்லியன் (US$1.57 பில்லியன்) ஏற்றுமதி திறனை உருவாக்க முடிந்தது," என்று செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் கூறினார்.
அடையாளம் காணப்பட்ட தயாரிப்புகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு (O&G) சேவைகள், குறைக்கடத்திகள்,செம்பனை எண்ணெய், விண்வெளிக் கூறுகள், உணவு மற்றும் பான பொருட்கள் ஆகியவை அடங்கும்.
மலேசியாவிற்கும் பிரேசிலுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்தும் வணிக ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதிலும் இந்த பயணம் வெற்றியடைந்ததாக அவர் கூறினார்.
மலேசியாவும் பிரேசிலும் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களில் இருதரப்பு மற்றும் பலதரப்பு மட்டங்களில் பல்வேறு துறைகளில் நெருங்கிய கூட்டுறவுகளைக் கொண்டுள்ளன.
2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் மலேசியா மற்றும் பிரேசிலுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 19.8 சதவீதம் அதிகரித்து RM14.83 பில்லியனாக (US$3.2 பில்லியன்)உள்ளது. இது கடந்தாண்டு RM12.38 பில்லியன் (US$2.74 பில்லியன்) ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக பிரேசில் இருந்தது.
பிரேசிலில் இருந்து மொத்தம் RM8.64 பில்லியன் (US$2.73 பில்லியன்)பெறப்பட்டது. அதில் முதலீடு உணவு உற்பத்தித் துறை, ரப்பர் பொருட்கள், போக்குவரத்து உபகரணங்கள் மற்றும் உலகளாவிய விநியோக மையங்கள் உள்ளடங்கும்.
பெட்ரோனாஸ், யின்சன் மற்றும் சபுரா போன்ற மலேசிய நிறுவனங்களும் பிரேசிலில் எரிசக்தி மற்றும் O&G துறைகளில் முதலீடு செய்கின்றன. மொத்த முதலீடு 15 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும்.
- பெர்னாமா


