ஷா ஆலம்,நவ 27: பெஸ்தாரி ஜெயா, கோலா சிலாங்கூரில் உள்ள ஹார்மோனி மடாணி மக்கள் குடியிருப்பு திட்டத்தின் (பிஆர்ஆர்) கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 28 அன்று கோலா சிலாங்கூர் நகராண்மை கழகத்தில்(MPKS) திட்ட அனுமதி பெற்றதாக வீட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா கூறினார்.
"ஒப்புதல் பெற்ற பிறகு முன்மொழியப்பட்ட குடியிருப்பு வடிவமைப்பு இறுதி செய்யப்படும். அதே நேரத்தில் சான்றளிக்கப்பட்ட முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு யூனிட் விற்பனை விலை RM45,000 ஆகும்," என்று அவர் கூறினார்.
கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவோவின் கேள்விக்கு போர்ஹான் அளித்த பதிலை உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் வாசித்தார்.
மொத்த RM75 மில்லியன் செலவில் வீட்டு வசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் மூலம் வீடு கட்டும் திட்டம் மத்திய அரசாங்கத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று போர்ஹான் விளக்கினார்.
"முன்னாள் பெர்ஜாயாவின் தோட்ட தொழிலாளர்களின் வீட்டுவசதிக்கான வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்தின் RM40 மில்லியன் மற்றும் சிலாங்கூரின் RM35 மில்லியன் ஒதுக்கீடு மூலம் தீர்த்து வைப்பதற்கு முன்மொழிவுக்கு மே 10 அன்று மாநில அரசாங்கக் கூட்டக் குழு கொள்கையளவில் ஒப்புக்கொண்டது" என்று அவர் கூறினார்.


