ஷா ஆலம், நவ. 27- ஆடம்பரக் வாகனங்களில் ஒன்றாக விளங்கும்
ஃபெர்ராரி கார் ஒன்று கார் கழுவும் மையத்திலிருந்து களவு போனதில்
தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண் உள்ளிட்ட
அறுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றபுலனாய்வுப்
பிரிவு பல்வேறு இடங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில்
ஐந்து உள்நாட்டினர் மற்றும் ஒரு வெளிநாட்டினரை உள்ளடக்கிய
அக்கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில
போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து ஃபெர்ராரி, நாஸா சூரியா
மற்றும் இரு பி.எம்.டபள்யு. கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர்
சொன்னார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து எட்டு கைப்பேசிகள், ஃபெர்ராரி உள்பட
இரு கார்களின் சாவிகள், பேக், மலேசிய கடப்பிதழ், கத்தியுடன்
இணைக்கப்பட்ட நாடா ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று அவர்
குறிப்பிட்டார்.
இவை தவிர கார்களுக்கான மூன்று தொலைக்கட்டுப்பாட்டு கருவிகள்,
வீட்டுக் கதவு நுழைவு அட்டை, டைமண்ட் எழுதப்பட்ட பிளாஸ்டிக் பை
ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன என்று நேற்று இங்கு வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 23 முதல் 40 வயது வரையிலான அவர்களில்
ஒருவருக்கு மட்டுமே போதைப் பொருள் தொடர்பில் இரு குற்றப்பதிவுகள்
உள்ள வேளையில் மற்றவர்களுக்கு எந்த குற்றப் பதிவும் இல்லை என்று
அவர் சொன்னார்.
இருவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வேளையில் மேலும் இருவருக்கு
இன்று வரையிலும் மேலும் ஒருவருக்கு டிசம்பர் 3ஆம் தேதி வரையிலும்
தடுப்புக் காவல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


