கோத்தா பாரு, நவ. 27- தனக்கு எதிரான நிந்தனை வழக்கை குவா மூசாங்
செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு
மாற்றக் கோரி முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் செய்து
கொண்ட விண்ணப்பத்தை கோத்தா பாரு உயர் நீதிமன்றம் ஏற்றுக்
கொண்டது.
அண்மையில் நடைபெற்ற நெங்கிரி இடைத் தேர்தலின் போது
நிந்தனைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக மொஹிடினுக்கு எதிராக
கொண்டு வரப்பட்ட இந்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு
மாற்றுவதாக நீதிபதி டத்தோ அஸ்மி அப்துல்லா தனது தீரப்பில் கூறினார்.
சிக்கலான சட்ட அம்சங்கள், விசாரணையின் போது எழக்கூடும் என
எதிர்பார்க்கப்படும் எதிர்பாராத சவால்கள், குறிப்பாக 1948ஆம் ஆண்டு
நிந்தனைச் சட்டத்தின் சில பிரிவுகளில் காணப்படும் அரசியலமைப்பு
செல்லுபடி நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விண்ணப்பத்தை
தாங்கள் முன்வைப்பதாக மொஹிடினின் வழக்கறிஞர் அமீர் ஹம்சா
அர்ஷாட் கூறினார்.
முன்னாள் பிரதமருக்கு எதிரான இந்த வழக்கு ஊடகங்களின் கவனத்தை
ஈர்த்துள்ளதோடு பொது நலன் சார்ந்ததாகவும் உள்ளது. ஆகவே இந்த
வழக்கு உயர்நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படுவது சரியானது என்று அவர்
பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கை குவா மூசாங் செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து கோத்தா
பாரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரும் விண்ணப்பத்தை
மொஹிடினின் வழக்கறிஞர்கள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தாக்கல்
செய்தனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி இரவு 10.30 மற்றும் 11.50 மணிக்கும்
இடையே டேவான் செமாய் பெல்டா பக்தி பெராசுவில் நடைபெற்ற நெங்கிரி இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது நிந்தனைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை மொஹிடின் முன்னதாக மறுத்து விசாரணை கோரியிருந்தார்.
கடந்த 15வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமக்கு 222 நாடாளுமன்ற
உறுப்பினர்களில் 115 பேரின் ஆதரவு இருந்த போதிலும் மாமன்னர்
தம்மை பிரதமர் பதவியேற்க அழைக்கவில்லை என மொஹிடின்
குற்றஞ்சாட்டியிருந்தார்.


