ஷா ஆலம், நவ. 27 - நான்கு கட்டங்களை உள்ளடக்கிய போர்ட் கிள்ளான் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் 797,361 வெள்ளி செலவில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்இதிட்டத்தின் ஒன்று மற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் பெர்சியாரான் ராஜா மூடா மூசா மற்றும் ஜாலான் ஷாபண்டார் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
தற்போது 97 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தை முடிக்க தார் போடும் பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று அவர் கூறினார்.
போர்ட் கிள்ளான் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹுரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.
மூன்று கட்டங்களை உள்ளடக்கிய போர்ட் கிள்ளான் நகர மேம்பாட்டுத் திட்டம் தொடரும். தற்போது அங்கு துப்புரவுப் பணிகளில் கவனம் செலுத்தப்படுவதோடு இறுதிக் கட்டமாக தற்போதுள்ள கடைகளை இடித்து மீண்டும் புதிதாக கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
மலேசியாவின் சரக்கு போக்குவரத்து துறையை ஊக்குவிக்கும் வகையில் பூலாவ் இண்டா சுற்று வட்டச் சாலை மற்றும் வடகிள்ளான் துறைமுக சாலைகளை அமைக்கவும் மேம்படுத்தவும் 10.7 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அறிவித்தார்.


