குவாந்தன், நவ 27: கடந்த மாதம் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட போலி முதலீட்டுத் திட்டத்தில் 56 வயதான ஓய்வு பெற்ற நபர் ஒருவர் RM577,000 இழந்தார்.
பாதிக்கப்பட்டவர் முகநூல் தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட நல்ல லாபத்தை உறுதி அளிக்கும் பங்கு முதலீட்டுத் திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வம் கொண்டிருந்ததாகப் பகாங் காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.
பின்னர் அந்நபருக்கு தனிப்பட்ட தகவல்களை நிரப்புவதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 மற்றும் நவம்பர் 21 க்கு இடையில், அவர் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தின் மூலம் பங்குகளை வாங்குவதற்கு தனது சொந்த சேமிப்பையும் மற்றும் சேமநிதி (EPF) பணத்தையும் பயன்படுத்தி 15 பரிவர்த்தனைகளை செய்ததாகவும் அவர் கூறினார்.
"அவர் RM7.7 மில்லியனுக்கும் அதிகமான லாபம் ஈட்டியதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணரத் தொடங்கினார். மேலும், முதலீட்டு விண்ணப்பமும் நீக்கப்பட்டது," என்று ஓத்மான் கூறினார்.
நேற்று அந்நபர் குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் புகார் அளித்ததாகவும், குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டதாகவும் யாஹாயா கூறினார்.
- பெர்னாமா


