(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 27- சிலாங்கூர் இந்திய சமூக மற்றும்
தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) தொடங்கப்பட்டது
முதல் இதுவரை 410 பயனாளிகள் 23 லட்சம் வெள்ளி மதிப்பிலான
வர்த்தக உபகரண உதவிகளைப் பெற்றுள்ளனர்.
குறைந்த வருமானம் பெறும் தொழில்முனைவோரை இலக்காக கொண்ட
இந்த திட்டம் இந்திய சமூகத்தை பொருளாதார ரீதியாக உயர்த்தும் மாநில
அரசின் நோக்கத்திற்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது
என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று 2025ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா
மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர்
இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இந்த ஐ-சீட் திட்டம் தொடங்கப்பட்டது முதல்
வர்த்தகம், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத் துறைகளில் ஈடுபடும்
பலர் தங்களின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருமானத்தை
பெருக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
ஐ.சீட் திட்டம் மற்றும் இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதார மேம்பாடு
தொடர்பில் பல ஆக்ககரமான கருத்துகளை முன்வைத்த செந்தோசா,
கோத்தா கெமுனிங், மேரு, பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன்
சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும், மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக
வருமானம் பெறும் மற்றும் குறைந்த பட்சம் வர்த்தகத்தில் ஈடுபடும்
விண்ணப்பதாரர்களுக்கு இந்த திட்டத்தில் வாய்ப்பளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மாநிலம்
முழுவதும் உள்ள 56 தொகுதிகளைச் சேர்ந்த இந்திய சமூகத் தலைவர்கள்
மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என பாப்பாராய்டு கூறினார்.
இந்த ஐ-சீட் திட்டம் இந்தியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருமான
இடைவெளியைக் குறைப்பதிலும் வறுமையை ஒழிக்கும் அரசாங்கத்தின்
முயற்சிக்கு உதவுவதிலும் நேர்மறையான பங்கினை ஆற்றி வருகிறது
என்று அவர் குறிப்பிட்டார்.


