கோலாலம்பூர், நவ 27 - பழுதடைந்த கூட்டரசு சாலைகளை 24 மணி நேரத்திற்குள் சீரமைப்பதற்கு பொதுப்பணி அமைச்சு நிர்ணயித்த நிலையான செயலாக்க நடைமுறையை மாநில மற்றும் ஊராட்சி மன்ற அதிகாரிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.
கூட்டரசு சாலைகள் தவிர்த்து பொதுப்பணித் துறையின் கீழுள்ள மாநில மற்றும் ஊராட்சி மன்ற அதிகார வரம்பிற்குட்பட்ட சாலைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஏஜென்சிகள் அமைச்சின் நடைமுறையைப் பின்பற்றவில்லை என்று துணை பொதுப்பணித் துறை அமைச்சய் அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் கூறினார்.
மோட்டார் சைக்கிள் சாலையிலுள்ள குழியில் விழுந்ததால் தலை, உடல், கைகள் மற்றும் கால்களில் ஏற்பட்ட காயங்களுக்காக ஜோகூரில் ஒருவர் 720,000 வெள்ளி இழப்பீடு கோரி ஊராட்சி மன்ற ஒப்பந்ததாரர் மீது வழக்கு தொடர்ந்தது போன்ற சிரமங்களை பொதுமக்கள் சந்திக்க மாட்டார்கள் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே சாலைகளை விரைவாகவும் கவனமாகவும் முறையாகவும் பராமரிக்க வேண்டும் என்பதை இந்த வழக்கு நினைவூட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் இரவு மற்றும் கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரிய விருந்து நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.


