கோலாலம்பூர், நவ 27: 2023 முதல் 5,000 வீடுகளின் புதிய கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு நடவடிக்கை மூலம் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் (KPKT) உறுதிபூண்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு குறைந்தபட்சம் RM91.15 மில்லியன் ஒதுக்கப்பட்டது, கடந்த ஆண்டு RM40.81 மில்லியனாக இருந்தது இவ்வாண்டு RM50.34 மில்லியனாக அதிகரித்தது என அமைச்சர் இங் கோர் மிங் கூறினார்.
"2025 ஆம் ஆண்டில், பாழடைந்த மற்றும் பழுதடைந்த வீடுகளை சரிசெய்வதற்கும் நகர்ப்புற வறுமையை போக்க புதிய வீடுகளை கட்டுவதற்கும் கிட்டத்தட்ட RM60 மில்லியனை மடாணி அரசாங்கம் ஒதுக்கும்.
"அனைவருக்கும் தங்குமிடம் என்ற தொலைநோக்குப் பார்வையில், Syarikat Perumahan Negara Berhad (SPNB) போன்ற ஏஜென்சிகளுடன் இணைந்து, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் தேவைப்படுபவர்களுக்கு வீடுகளைக் கட்டி மறுவாழ்வு அளிக்கும் முயற்சிகளை உணர்ந்து செயலாற்றுகிறது" என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடாணி அரசாங்கம் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான வீடு இருப்பதை உறுதிசெய்வதன் சான்றாகும் இது என்றார்.
"மேலும் Rumah Mesra Rakyat (RMR) திட்டம் மக்களின் மீதான அரசாங்கத்தின் அக்கறையைப் பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், மலேசியர்களின் வாழ்வின் கண்ணியத்தை உயர்த்துவதில் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அடையாளமாகும்" என்று அவர் கூறினார்
- பெர்னாமா


