கோலாலம்பூர், நவ. 27- பண்டான் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு
பகுதியில் குடிநுழைவுத் துறை நேற்றிரவு மேற்கொண்ட ஒருங்கிணைந்த
அதிரடிச் சோதனையில் 119 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
இச்சோதனை நடவடிக்கையில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம்,
அரச மலேசிய போலீஸ் படை மற்றும் தேசிய பதிவு இலாகா ஆகியவை
பங்கு கொண்டதாக சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறையின் இயக்குநர்
கைருள் அமினுஸ் கமாருடின் கூறினார்.
பொது மக்கள் அளித்த புகார் மற்றும் ஒரு மாத காலமாக
மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் அடிப்படையில் நேற்று
மாலை 6.00 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட
இச்சோதனையில் பல்வேறு அமலாக்கத் துறைகளைச் சேர்ந்த 438
அதிகாரிகளும் உறுப்பினர்களும் பங்கு கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சோதனையின் போது மொத்தம் 400 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களில் 18 முதல் 50 வயது வரையிலான 89 மியன்மார் பிரஜைகள், 14 வங்காளதேசிகள், எட்டு நேப்பாளிகள், தலா நான்கு இந்தோனேசியர்கள் மற்றும் இந்தியர்கள்
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார்.
கைதானவர்களில் பெரும்பாலோர் 1956/63ஆம் ஆண்டு குடிநுழைவுச்
சட்டத்தின் 6(1)(சி) மற்றும் 15(1)(சி) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம்
புரிந்துள்ளதாகக் கூறிய அவர், கைதான அனைவரும் தொடர்
சோதனைக்காக செமினி குடிநுழைவுத் துறை தடுப்புக் காவல்
மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார்.
நாட்டின் சட்டத்திட்டங்களை மீறி நடக்கும் அந்நிய நாட்டினரை கைது
செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி மற்றும் சொந்த நாடுகளுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளை குடிநுழைவுத் துறை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
அந்நிய பிரஜைகளுக்கு புகலிடம் அளிக்க வேண்டாம் என பொது மக்கள்
மற்றும் வணிர்களைக் கேட்டுக் கொண்ட அவர் இத்தகைய குற்றங்களைப்
புரிவோர் கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரும் என்றார்.


