(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ 27- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இஸ்லாம் அல்லாத
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஐ-சீட் எனப்படும் இந்திய சமூக மற்றும்
தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகாவுக்கு ஒதுக்கப்படும் மானியம்
அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற
உறுப்பினர் எஸ். பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
வழிபாட்டுத் தலங்களுக்கான மானியம் ஒரு கோடி வெள்ளியாகவும் ஐ-சீட்
திட்டத்திற்கான மானியம் குறைந்த பட்சம் ஐம்பது லட்சம்
வெள்ளியாகவும் உயர்த்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.
மாநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்குமான பிரதிநிதி என்ற முறையில்
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த கோரிக்கை பரிசீலிப்பார்
எனத் தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக மாநில சட்டமன்றத்தில் நேற்று
2025ஆம் ஆண்டு விநியோக மசோதா மீதான விவாதத்தில் கலந்து
கொண்டு உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
இந்திய சமூகத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் நோக்கில் ஐ-சீட்
திட்டத்தை அமல்படுத்திய மாநில அரசுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
இந்திய சமூகம் மீது பிரத்தியேக கவனம் செலுத்தும் நாட்டின் ஒரே
மாநிலமாகவும் சிலாங்கூர் விளங்குகிறது. இம்மாநிலத்தில்தான் மிக
அதிகமாக அதாவது சுமார் ஏழு லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதே
சமயம், இந்திய சமூகத்தில்தான் ஏழ்மை நிலையும் அதிகம்
காணப்படுகிறது.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட
ஐ-சீட் திட்டத்தின் பணி இலக்கு வர்த்தக உபகரணங்களை வழங்குவதோடு
நின்று விட்டது. ஆகவே, நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக ஐ-சீட் திட்டத்திற்கு ஐம்பது லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட வேண்டும் என பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.
இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான 40 லட்சம் வெள்ளி
மானியம் போதாது என்ற சுபாங் ஜெயா உறுப்பினரின் (மிஷெல் இங்)
கருத்தை வரவேற்ற பிரகாஷ், வழிபாட்டுத் தலங்களுக்கான மானியத்தை
மாநில அரசு ஒரு கோடி வெள்ளியாக உயர்த்த வேண்டும் என
வலியுறுத்தினார்.
மானியப் பகிர்ந்தளிப்பின் போது சில ஆலயங்களுக்கு 5,000 வெள்ளி வரை
வழங்கப்படுவதாக அறிகிறேன். வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள
நடப்புச் சூழலில் 5,000 வெள்ளி மானியம் போதாது. ஆகவே. வழிபாட்டுத்
தலங்கள் கூடுதல் தொகையைப் பெறுவதற்கு ஏதுவாக வருடாந்திர
மானியத்தை ஒரு கோடி வெள்ளியாக உயர்த்தும்படி பரிந்துரைக்கிறேன்
என்று அவர் குறிப்பிட்டார்.
வழிபாட்டுத் தலங்களின் தேவை மற்றும் அதிகரித்து மக்கள் தொகையைக்
கருத்தில் கொண்டு இந்த மானியம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம்
என்றார் அவர்.


