ஈப்போ, நவ. 27- இரு ஆடவர்களை கத்தி முனையில் மடக்கி 15 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இக்கொள்ளைச் சம்பவம் குறித்து நேற்று காலை 9.30 மணியளவில் தமது தரப்புக்கு தகவல் கிடைத்ததாக பேராக் காவல்துறையின் இடைக்காலத் தலைவர் டிசிபி ஜூல்கிப்ளி சாரியாட் கூறினார்.
முகமூடி அணிந்த மற்றும் பாராங் கத்திகளை ஆயுதமாகக் கொண்ட அனைத்து சந்தேக நபர்களும் வெள்ளை வோல்வோ கார், பழுப்பு நிற பிஎம்டபிள்யூ மற்றும் கருப்பு டொயோட்டா எஸ்திமா கார்களில் தப்பிச் சென்றதாக அவர் கூறினார்.
சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட இருவரும் 15.4 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 4.1 கிலோ நகைகள் அடங்கிய ஒரு பையை எடுத்துக் கொண்டு ஒரு வணிக வளாகத்தை விட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.
அவ்விருவரும் நகைகள் அடங்கிய பையை தங்கள் வாகனத்தின் பிற்புறம் பொருள் வைக்கும் பூத் பகுதியில் வைக்க முற்பட்டபோது சந்தேக நபர்கள் தங்கள் காரினால் அந்த காரின் பின்புறத்தில் மோதி நகைகளுடன் தப்பினர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தைப் பார்த்த பொது மக்கள் போலீஸ் விசாரணைக்கு உதவும் பொருட்டு அதனை தங்கள் கைப்பேசியில் பதிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
முதல் கட்ட விசாரணையில், சந்தேகநபர்கள் அனைவரும் போலி வாகன பதிவு எண்களைப் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது அவர் குறிப்பிட்டார்.


