ஷா ஆலம், நவ. 27- மலேசியா மற்றும் சீனா இடையிலான அரசதந்திர
உறவுகள் ஐம்பது ஆண்டு நிறைவை அடையும் நிலையில் மலேசியாவில்
முதலீடு செய்வதில் சீன நிறுவனங்கள் காட்டும் ஆர்வம் தொடர்ந்து
அதிகரித்து வருகிறது.
அரசாங்கத் துணை நிறுவனங்களான ஹெபேல் லோஜிஸ்டிக்ஸ் குருப்
மெட்டல் மெட்ரியல் கோ.லிமிடெட், ஸ்கைவெஸ்ட் சென்.பெர்ஹாட்
மற்றும் சன்ஹோலா குருப் கோ. லிமிடெட் நிறுவனங்களுடனான கூட்டுத்
திட்ட ஒப்பந்தம் சரக்கு பட்டுவாடா துறையில் மலேசிய-சீன உறவை
வலுப்பெறச் செய்து அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பினை
ஏற்படுத்தும் என்று பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் (பி.என்.எஸ்.பி.)
தலைமை செயல்முறை அதிகாரி ராஜா அகமது ஷாரிர் இஸ்கந்தார் ராஜா
சலீம் கூறினார்.
நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிலாங்கூர் சரக்கு துறைமுகங்கள்
மற்றும் விமான நிலையங்களைக் கொண்டிருக்கும் காரணத்தால்
மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாங்கள் பல முறை சீனாவுக்கு
பயணம் மேற்கொண்டோம் என்று அவர் தெரிவித்தார்.
ஆகவே, சரக்கு கிடங்கு மற்றும் சரக்கு பட்டுவாடாவுக்கான பிராந்திய
மையமாக சிலாங்கூர் விளங்குவதற்குரிய உகந்த சூழல் நிலவுகிறது என்று
அவர் சிலாங்கூர் ஜெர்னலிடம் தெரிவித்தார்.
முன்னதாக அவர் இங்குள்ள கான்கார்ட் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டு
ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கில் கலந்து கொண்டார். மாநிலத்தில்
குறிப்பாக, சரக்கு கிடங்கு மற்றும் சரக்கு பட்டுவாடா துறைகளில் அந்நிய
முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
இதன் மூலம் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கவும் பிராந்திய
இணைப்புகளை வலுப்படுத்தவும் இந்த பிராந்தியத்தின் முக்கிய பொருளாதார மையமாக சிலாங்கூரை நிலைப்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகளை ஈர்ப்பதில் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வரும்
வேளையில் சீன முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக இன்வெஸ்ட்
சிலாங்கூர் பெர்ஹாட்டுடன் அது இணைந்து செயல்பட்டு வருகிறது என்று
ஷாரிர் குறிப்பிட்டார்.


