கோலாலம்பூர், நவ. 26 - இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை 101 கோடி
வெள்ளி மின் கட்டணத்தை செலுத்தத் தவறிய 627,491 தெனாகா நேஷனல்
கணக்கு உரிமையாளர்களின் மின் விநியோகத்தை துண்டிப்பதற்கான
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 464,076 கணக்கு உரிமையாளர்களை உட்படுத்திய 94 கோடியே
54 லட்சம் வெள்ளி நிலுவைத் தொகையாக இருந்தது என்று எரிசக்தி
மாற்றம் மற்றும் நீர் உருமாற்றத் துறை துணையமைச்சர் அக்மார்
நஸூருல்லா முகமது நாசீர் கூறினார்.
இக்காலக்கட்டத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பேராக் மற்றும்
திரங்கானுவைச் சேர்ந்தவர்களே அதிகம் மின் கட்டண பாக்கியை
வைத்திருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
நிதி நெருக்கடி, அலட்சியம் மற்றும் பொறுப்புமின்மை காரணமாக
கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. பெரும்பாலான
கணக்குகள் வாடகைக்கு இருப்போர் அல்லது சொத்து உரிமையாளர்
அல்லாதவர்கள் பெயரில் உள்ளன. மேலும் கட்டணங்களைச் செலுத்தும்
பட்டியலில் தெனாகா நேஷனல் பெரும்பாலும் கடைசி இடத்தில் உள்ளது
என்றார் அவர்.
மக்களவையில் இன்று கட்டணம் செலுத்தாத காரணத்தினால் தெனாகா
நேஷனல் நிறுவனத்தால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஒட்டுமொத்த கட்டண பாக்கி குறித்து கோத்தா மலாக்கா தொகுதி
உறுப்பினர் கூ போய் தியோங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்
அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தெனாகா நேஷனல் நிறுவனம் தற்போது 1 கோடியே 4 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாகக் கூறிய அக்மால், அவர்களில் 85 லட்சம் பேர் குடியிருப்பாளர்களாக உள்ள வேளையில் 19 லட்சம் பேர் குடியிருப்பாளர் அல்லாத பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்றார்.


