(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 26 - சுங்கை பூலோ தொகுதியிலுள்ள நான்கு இந்து
ஆலயங்களுக்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன்
மானியம் வழங்கினார்.
தேவி ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயம், ஸ்ரீ சிவசக்தி ஆலயம், ஸ்ரீ மகா
திரௌபதி அம்மன் ஆலயம், ஸ்ரீ மகா மதுரை வீரன் ஆலயம் ஆகிய
நான்கு ஆலயங்களின் பொறுப்பாளர்களிடம் ரமணன் மானியத்தை
நேரடியாக ஒப்படைத்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றால் தனது சம்பளம் மற்றும் அலவன்சை தொகுதி
மக்களின் நலனுக்காக செலவிடவுள்ளதாக அளித்த வாக்குறுதியின்
அடிப்படையில் ரமணன் தனது வருமானத்தை மாதந்தோறும் வழிபாட்டுத்
தலங்களுக்கு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் வெற்றி பெற்றது முதல் சமய வேறுபாடின்றி சுங்கை
பூலோவிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தாம் மாதச்
சம்பளம் மற்றும் அலவன்சை பகிர்ந்தளித்து வருவதாக
தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சருமான
ரமணன் சொன்னார்.
இது எனது வாக்குறுதி மற்றும் கடப்பாடு ஆகும். அனைத்து மானியங்களும் முறையாகவும் திட்டமிட்டபடியும் விநியோகிக்கப்படுவதை நான் உறுதி செய்வேன் என அவர் தெரிவித்தார்.
வாக்குறுதியளித்தபடி கடந்த ஈராண்டுகளாக இந்த உதவியை நான் செய்து
வருகிறேன். இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. இதுநாள்
வரை எனக்கு ஆதரவளித்து வரும் சுங்கை பூலோ மக்களுக்கு திரும்ப
செலுத்தும் நன்றிக் கடனுக்கான அடையாளமாகும் என்றார் அவர்.
இந்த மானியத்தை தங்களின் சமய நடவடிக்கைகளுக்கு மட்டுமின்றி
இனங்களுக்கிடையே ஒற்றுமை வளர்ப்பதற்கான திட்டங்களை
அமல்படுத்தவும் பயன்படுத்தும்படி வழிபாட்டுத் தலங்களின்
பொறுப்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
அனைத்துக்கும் மேலாக மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பேன்
என நான் வாக்குறுதியளிக்கிறேன். இன, சமய மற்றும் வாழ்க்கைப்
பின்னணி பாராமல் அனைத்து மக்களின் நலனுக்காகவும் போராடுவேன்
என உறுதியளிக்கிறேன் என்று அவர் சொன்னார்.


