பெய்ரூட், நவ. 26 - இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லா அமைப்புக்கும்
இடையிலான போர் நிறுத்த உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பேச்சு வார்த்தை சுமூகமாக
தொடரும் பட்சத்தில் அடுத்த 36 மணி நேரத்தில் இதன் தொடர்பான
அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுதைய சூழ்நிலை நேர்மறையானதாக உள்ளது. போர் நிறுத்தம்
தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. அது
இறுதி செய்யப்படுவதற்கு இன்னும் சில மணி நேரங்களே எஞ்சியுள்ளன.
எதிர்பார்த்தபடி அனைத்தும் சுமூகமான முறையி நடந்தால் அதன் அதன்
தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று லெபனான் நாடாளுமன்ற
உறுப்பினர் கஸாம் ஹஷிமை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி
செய்தி வெளியிட்டுள்ளது.
ஹெஸ்புல்லா அமைப்புடன் போர் நிறுத்த உடன்பாட்டை
அங்கீகரிப்பதற்காக இஸ்ரேலிய நாடாளுமன்றம் கூடும் அதே நேரத்தில்
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது.
இந்த ஒப்பந்தம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் லெபனான்
அரசாங்கத்திற்கு நேற்று பின்னேரம் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும்
எனினும் அதன் வெற்றியை உறுதி செய்வதற்காக பொறுத்திருந்து
பார்க்கும் நிலைப்பாட்டை அந்நாடு எடுத்துள்ளதாகவும் லெபனான் நாட்டின்
தனியார் தொலைக்காட்சியான அல்-ஜஸிட் கூறியது.
சிறிய விவகாரங்கள் குறித்து தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
எனினும், பிரதான நிபந்தனைகளை இந்த விவகாரம் பாதிக்காது என்று
அது தெரிவித்தது.
இந்த அமைதி முயற்சிகளை அனைத்துலக சமூகம் வரவேற்றுள்ள
நிலையில் போர் நிறுத்த முயற்சிக்கு உகந்த சூழலை இது ஏற்படுத்தும்
என எதிர்பார்க்கப்படுகிறது.


