ஷா ஆலம், நவ. 26 - பள்ளி வகுப்பறைகளை மலேசிய தொழில்திறன்
சான்றிதழ் திறன் பயிற்சிக் பட்டறைகளாக தரம் உயர்த்தும்
நடவடிக்கையின் வாயிலாக சிறப்பு கல்வித் தேவைப்படும் 2,758
மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் 29 பள்ளிகளை உள்ளடக்கிய இந்த திட்டத்திற்கு 1
கோடியே 16 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாக முதலீட்டுத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் கல்வியமைச்சும் மாநில கல்வி இலாகாவும்
இணைந்து 28 லட்சம் வெள்ளி செலவில் சிறப்புக் கல்விக்குத் தேவையான
1,440 உபகரணங்கள் மற்றும் தேவையான பொருள்களை விநியோகம்
செய்தன என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று தெராத்தாய் உறுப்பினர் இயோ ஜியா ஹார்
எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இங் இவ்வாறு சொன்னார்.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள், தொழில்நுட்பம்
மற்றும் போதனையாளர்கள் ரீதியாக வழங்கப்படும் ஆதரவு குறித்து
இயோ கேள்வியெழுப்பியிருந்தார்.
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் கீழுள்ள பள்ளிகளுக்கு இணையச்
சேவையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இவ்வாண்டு ஜூலை மாதம்
தொடங்கப்பட்டதாகக் கூறிய இங், 45 லட்சம் வெள்ளி செலவில் 927
பள்ளிகளுக்கு 2,583 இணைய இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்றார்.
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் கீழுள்ள பள்ளிகளில் இணையச்
சேவையை வழங்குவது தொடர்பான முன்னெடுப்புகள் ஓரிட ஒப்பந்த
அடிப்படையில் கடந்த 2019 முதல் 2024 ஜூன் வரை மேற்கொள்ளப்பட்டது
என்று அவர் தெரிவித்தார்.


