கோலாலம்பூர், நவ. 25 - அந்நிய நாட்டு பிரஜைகளுக்குச் சொந்தமான
வாகனங்கள் ரோன்95 பெட்ரோலுக்கான மானியச் சலுகையை
பயன்படுத்துவதை அனுமதிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை
என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறினார்.
பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தில் வரையறுக்கப்பட்டதைப் போல்
நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கேற்ப
இந்த நடவடிக்கை அமைகிறது என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டு அமல்படுத்தப்படவிருக்கும் ரோன்95 பெட்ரோலுக்கான மானிய
மறுசீரமைப்பின் வழி பி85 தரப்பினருக்கு மட்டும் மானியம் வழங்கினால்
அரசாங்கத்தின் செலவினத்தில் 360 கோடி வெள்ளியை அல்லது 21.9
விழுக்காட்டுத் தொகையை மிச்சப்படுத்துவதற்குரிய வாய்ப்பினை பெற
இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், ரோன்95 இலக்கு மானியம் திட்டத்தில் அந்நிய பிரஜைகள்
உள்ளடக்கப்படாமலிருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் 0.3 பில்லியன்
வெள்ளி அல்லது 2.0 விழுக்காட்டுத் தொகையை மிச்சப்படுத்த முடியும்
என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட அவரது
எழுத்துப்பூர்வப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புருணையில் பதிவு பெற்ற வாகனங்கள் மலேசியாவில் ரோன்95
பெட்ரோலை பயன்படுத்த அனுமதிக்கும் பரிந்துரை குறித்து கோல கிராய்
உறுப்பினர் அப்துல் லத்திப் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கையில் ரபிஸி இவ்வாறு தெரிவித்தார்.


