அங்காரா, நவ. 26 - காஸா தீபகற்பத்தில் நேற்று இஸ்ரேலியப் படைகள்
நடத்திய தாக்குதலில் மேலும் 24 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் சேர்த்து கடந்தாண்டு தொடங்கி காஸா மீது இஸ்ரேல்
நடத்தி வரும் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44,235 பேராக
உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, நீடித்து வரும் தாக்குதல்களில் மேலும் 104,638 பேர்
காயமடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி
அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இரு குடும்பங்களைக் குறி வைத்து இஸ்ரேல்
நடத்திய தாக்குதல்களில் 24 பேர் பலியானதோடு மேலும் 71 பேர்
காயமடைந்தனர்.
மீட்புக் குழுவினர் உரிய உதவிகளை வழங்க இயலாத நிலை காரணமாக
மேலும் பலர் இடிபாடுகளுக்கு மத்தியிலும் சாலைகளிலும் பரிதவித்து
வருவதாக அச்செய்தி கூறியது.
கடந்தாண்டு ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்கும்
நோக்கில் போரைத் தொடக்கிய இஸ்ரேல், ஐக்கிய நாடுகள் சபையின்
(ஐ.நா.) பாதுகாப்பு மன்றத்தின் போர் நிறுத்த தீர்மானத்தையும் மீறி இன்று
வரை இனப்படுகொலைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
காஸாவில் நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்கள் மற்றும் மனிதாபிமான
குற்றங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹூ,
அந்நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் யாவ் கேலண்ட் ஆகியோருக்கு
எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை
கைது ஆணையைப் பிறப்பித்தது.


