கோலாலம்பூர், நவ.25 - இரண்டு ஆண்டு கால ஆட்சியில் மக்களின் நலனைப் பாதுகாக்கவும் நாட்டை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டுச் செல்லவும் பல்வேறு மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் மடாணி அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.
அரசாங்கம் தொடர்ந்து கடுமையாக உழைக்கும் அதே வேளையில் மக்களுக்குப் பயனளிக்கும் முன்னெடுப்புகள் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நேற்றுடன் மடாணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இருப்பினும், மடாணியின் பார்வையை உண்மையாக உணர நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த அரசாங்கம் தொடர்ந்து உழைத்து மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் பல முயற்சிகளையும் கொள்கைகளையும் உருவாக்கும் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
மக்கள் மற்றும் நாட்டின் கண்ணியத்தை உயர்த்தும் முயற்சியாக மடாணி அரசாங்கத்தின் இரண்டு வருட நிர்வாகத்தில் செயல்படுத்தப்பட்ட பல முன்னெடுப்புகளின் விளக்கப்படத்தையும் அன்வார் தனது முகநூலில் பதிவேற்றினார்.
சுமார 90 லட்சம் பி40 பெறுநர்களுக்குப் பயனளிக்கும் ரொக்க உதவித் திட்டம் (எஸ்.டி.ஆர்.), 600 சில்லறை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அடிப்படைத் தேவைகளை வாங்குவதற்காக 84 லட்சம் பேருக்கு கருணை அடிப்படை பங்களிப்பு (சாரா) மற்றும் மக்கள் வருமான முன்னெடுப்பு (ஐ.பி.ஆர்.) ஆகியத் திட்டங்கள் அந்த விளக்கப்படத்தில் இடம் பெற்றுள்ளன.


