(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 25 - வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள்
பள்ளிக்குச் செல்வதில் எதிர்நோக்கும் போக்குவரத்து பிரச்சனைக்குத் தீர்வு
காணும் வகையில் மாநில அரசின் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ்
சேவை பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று செந்தோசா
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி பேருந்துக் கட்டணத்தை பெற்றோர்களால் செலுத்த முடியாத
காரணத்தினால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல இயலாத சூழல்
அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று அவர்
சொன்னார்.
இத்தகைய பிரச்சனைகள் மாணவர்களின் பள்ளி வருகையை மட்டுமின்றி
அவர்கள் தரமான கல்வியைப் பெறுவதையும் பாதிக்கும் என்பதால் இதற்கு
உரிய தீர்வு காணப்பட வேண்டும் என அவர் மாநில சட்டமன்றத்தில்
வலியுறுத்தினார்.
மாணவர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணும்
விதமாக ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் அதிக மாணவர்கள் உள்ள
வீடமைப்பு பகுதியாகச் சென்று பள்ளிகளுக்கு அருகில் நிற்பதற்கான
ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மேலும், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் நேரம் மற்றும் பள்ளி முடிந்து
வீடு திரும்பும் நேரத்திற்கு ஏற்பட பேருந்துகளின் பயண நேரமும்
ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் பயணம் தடைபடாமலிருக்க பள்ளி செல்லும் மற்றும் வீடு
திரும்பும் நேரங்களில் இப்பேருந்துகளில் மாணவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்பட வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இந்த திட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதில்
ஊராட்சி மன்றங்கள், பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள்
மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று குணராஜ்
வலியுறுத்தினார்.
இதன் தொடர்பில் குணராஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த
போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான்,
ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை பெரும்பாலும் பள்ளிகள்,
மருத்துவமனைகள், பேரங்காடிகள் போன்ற போன்ற பகுதிகள் வழியாக
மேற்கொள்ளப்படுவதாக க் கூறினார்.
சம்பந்தப்பட்ட பள்ளிகளை உள்ளடக்கிய பயணத் தடம் தொடர்பான
பரிந்துரையை ஊராட்சி மன்றங்கள் வாயிலாக முன்வைக்கும் பட்சத்தில்
அதனை தாங்கள் பரிசீலிக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.


