ஷா ஆலம், நவ. 25 - தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பகுதி
திட்டத்தில் (இட்ரிஸ்) மின்சார மற்றும் மின்னியல் துறைகளுக்கு
முன்னுரிமை அளிக்கப்படும் எனற மாநில சட்டமன்றத்தில் இன்று
தெரிவிக்கப்பட்டது.
இப்பகுதியில் முக்கியத்தும் தரப்படும் இதரத் துறைகளில் கிடங்குச்
சேவை, மருந்து தொழில்துறை, உணவுத் தயாரிப்பு, இயந்திரத் தயாரிப்பு
மற்றும வான் போக்குவரத்து ஆகியவையும் அடங்கும் என்று முதலீட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இந்த இட்ரிஸ் திட்டத்தில் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு
மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளில் ஸ்பார்க் எனப்படும் சிலாங்கூர்
தொழிலியல் கண்காட்சி பூங்கா திட்ட அமலாக்கமும் அடங்கும் என்று
அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த
மேம்பாட்டுப் பகுதி தொடர்பில் புக்கிட் லஞ்சான் தொகுதி உறுப்பினர் புவா
பெய் லிங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
இட்ரிஸ் திட்டத்தில் முதலீட்டாளர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும்
விதமாக சிறப்பு பிரீமியத் திட்டம், மேம்பாட்டுக் கட்டணத்தை வட்டியின்றி
தவணை முறையில் செலுத்துவதற்கு வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள்
வழங்கப்படுகின்றன என்று இங் சொன்னார்.
இது தவிர, காலி நிலங்கள் மற்றும் காலி கட்டிடங்களுக்கு மூன்று
ஆண்டுகளுக்கு ஐம்பது விழுக்காடு வரிச் சலுகை மற்றும் வர்த்தக
லைசென்ஸ்களுக்கு ஐந்தாண்டு காலத்திற்கு கட்டணச் சலுகை
வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
சிப்பாங் மற்றும் கோல லங்காட்டை உள்ளடக்கிய இந்த இட்ரிஸ் திட்டம்
முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் கீழ் முதலீட்டு மையமாகவும்
தொழில்துறை பகுதியாகவும் உருவாக்கம் காணும் என மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாகக் கூறியிருந்தார்.


