கோலாலம்பூர், நவ.25 - பூச்சோங், பூச்சோங் உத்தாமாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் கத்திரிக்கோலைக் காட்டி பெண்ணிடம் கொள்ளையிட்ட உள்ளூர் ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை 2.00 மணியளவில் பூச்சோங் பெர்மாய் பகுதியில் 25 வயதுடைய அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
சந்தேக நபர் முன் கதவு வழியாக வீட்டிற்குள் தனியாக நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்த பாதிக்கப்பட்ட பெண் உதவி கோரி கூச்சலிட்டுள்ளார். அவ்வாடவன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாயில் துணியைத் திணித்து, கைகளை கட்டியப் பின்னர் வீட்டை முழுமையாக சூறையாடியுள்ளான்
அவ்வாடவன் வீட்டிலிருந்த ஒரு தங்க மோதிரம், 600 வெள்ளி ரொக்கம் மற்றும் கருப்பு நிற ஒப்போ ஏ59 கைப்பேசி ஆகியவற்றைக் கொள்ளையிட்டுத் தப்பியுள்ளான் என ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த போது அந்த வீட்டில் நான்கு வெளிநாட்டு பெண்கள் தங்கியிருந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தின் போது கதவு திறக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டப் பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். சந்தேக நபர் கத்தரிக்கோலுடன் வீட்டினுள் நுழைய இத் வாய்ப்பளித்தது என்று அவர் சொன்னார்.
மேல் விசாரணைக்காக சந்தேகநபர் இன்று முதல் ஆறு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அஸ்லான் தெரிவித்தார். ஆயுதமேந்திய கொள்ளை அல்லது கொள்ளையினால் மரணம் அல்லது பலத்த காயம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதற்காக தண்டனைச் சட்டத்தின் (சட்டம் 574) பிரிவு 392 மற்றும் 397ன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.


