ஷா ஆலம், நவ. 25 - சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்து விளையாட்டாளர்
ஃபைசால் ஹலிம் மீது எரிதிராவகம் வீசப்பட்டச் சம்பவம் தொடர்பில்
காவல் துறையிடமிருந்து மாநில சட்டமன்றம் மறுமொழியைப்
பெற்றுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை புக்கிட் அமான்
குற்றப்புலனாய்வுத் துறையின் வகைப்படுத்தப்பட்ட சிறப்பு விசாரணைப்
பிரிவு எடுத்துக் கொண்டுள்ளது என்றத் தகவலை சிலாங்கூர் மாநில
போலீஸ் தலைவரிடமிருந்து தாங்கள் பெற்றுள்ளதாக சட்டமன்ற துணை
சபாநாயகர் முகமது கம்ரி கமாருடின் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் காவல் துறை தீவிர கவனம்
செலுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை
அடையாளம் காணவும் கைது செய்யவும் தேவையான
நிபுணத்துவத்தையும் உபகரணங்களையும் காவல் துறை கொண்டுள்ளது
என்று அவர் சட்டமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
ஃபைசால் விவகாரம் தொடர்பில் மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ்
வேங் சான் காவல் துறைக்கு கடிதம் அனுப்பிய போதிலும்
அத்துறையிடமிருந்து இதுவரை எந்த மறுமொழியும் வரவில்லை என்று
விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான்
ஹலிமி கடந்த வாரம் கூறியிருந்தார்.
ஃபைசாலுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தீவிரவாத மற்றும் பயங்கரவாத
பாணியிலான இந்த தாக்குதலை கண்டிக்கும் அவசரத் தீர்மானத்தை
மாநில சட்டமன்றம் கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றியது. இதன்
தொடர்பான விவாதத்தில் ஐந்து உறுப்பினர்கள் கலந்து கொண்ட
வேளையில் அத்தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன்
ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கடந்த மே மாதம் 5ஆம் தேதி கோத்தா டாமன்சாராவிலுள்ள பேரங்காடி
ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்களால் ஃபைசால் எரிதிராவகத்
தாக்குதலுக்கு ஆளானார்.


