கோலாலம்பூர், நவ. 25: செக்சன் 16,சுபாங் ஜெயா, சிலாங்கூரில் உள்ள கடை ஒன்றில் RM64,000 மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை வாடிக்கையாளரைப் போல் வேடமிட்ட நபர் திருடி சென்றார்.
காவல்துறையினருக்கு கிடைத்த புகார் அடிப்படையில்,காலை 10.40 மணியளவில் இரண்டு பெண் ஊழியர்கள் கடையை திறக்கும் போது அக்கடையின் முன் சந்தேக நபர் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது
பின் சந்தேக நபர் உள்ளே செல்ல அனுமதிக்கப் பட்டவுடன், அவர் இரண்டு தொழிலாளர்களிடம் பொருட்கள் குறித்து சில கேள்விகளைக் கேட்டார், திடீரென்று அவர் தனது முதலாளியை அழைத்து வருவதாகக் கூறி கடையை விட்டு வெளியேறினார் என்று தெரிவிக்கப் பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.
"அதன் பின் சம்பந்தப்பட்ட கைக்கடிகாரம் காணவில்லை என்று கண்டறியப்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கப் பட்டதாக," வான் அஸ்லான் அறிக்கை ஒன்றில் மூலம் தெரிவித்தார்.
சந்தேக நபர் கடைக்குள் இருந்தபோது அலமாரியில் இருந்த 'ரோலக்ஸ் டேட்ஜஸ்ட் 36 ஒய்ஸ்டர்ஸ்டீல்' கைக்கடிகாரத்தை திருடி சென்றதாக நம்பப்படுகிறது என்றார்.
குற்றவியல் சட்டத்தின் 380வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், தகவல் தெரிந்த பொதுமக்கள் சுபாங் ஜெயா மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை 03-7862 7222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக் முஹம்மது ஃபதுர்ரஹ்மான் அம்பாண்டியை 011-29395178 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவுமாறும் அவர் கேட்டு கொண்டார்.
- பெர்னாமா


