ஷா ஆலம், நவ. 25- பொது பூங்காக்களை கலந்துரையாடல் வளாகம்
உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மடாணி மக்கள் பூங்காவாக தரம்
உயர்த்தும் சிலாங்கூர் அரசின் முயற்சிக்கு பெரும் வரவேற்பு
கிடைத்துள்ளது.
நேர்மறையான மற்றும் வெளிப்படையான சமூகத்தின் உருவாக்கத்திற்கு
இத்தகைய பூங்காக்கள் சிறந்த தளமாக விளங்கும் என்று இளைஞர்
மற்றும் விளையாட்டுத் துறை துணையமைச்சர் ஆடாம் அட்லி அப்துல்
ஹலிம் கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசு முன்னெடுத்துள்ள திட்டத்தை நான்
வரவேற்பதோடு பெரிதும் பாராட்டுகிறேன். இவ்வளவு நாட்களாக
கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பொது பூங்காக்களின்
கலந்துரையாடல் வளாகங்கள் இனி மேம்படுத்தப்பட்டு பயன்மிக்கதாக
ஆக்குவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
உதாரணத்திற்கு அதிக செலவு பிடிக்காத இளைஞர்களுக்கான புத்தக
விவாதங்கள், கவிதை வாசிப்பு, எண்ணங்களை வெளிப்படுத்தும்
வளாகங்கள் வெளிப்படையான, விமர்சன ரீதியான மற்றும் நேர்மறையான
தலைமுறையினரின் உருவாக்கத்திற்கு பெரிதும் துணை புரியும் என அவர்
சொன்னார்.
நேற்று முன்தினம் கோலாலம்பூரில் நடைபெற்ற பேனா அமைப்பின்
ஏற்பாட்டிலான கவிதை வாசிப்பு மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்குப்
பின்னர் சிலாங்கூர்கினியிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்தாண்டு தொடங்கி மாநிலத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றப்
பகுதிகளிலும் பொது பூங்காக்களை நிர்மாணிப்பதற்கும் தரம்
உயர்த்துவதற்கும் 60 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் 2025ஆம் ஆண்டிற்கான வரவு
செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.


