சியோல், நவ. 25 - தென் கொரியாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ
பயணம் மேற்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று
சியோல் வந்தடைந்தார். மலேசியா-தென் கொரியா இடையிலான உறவை
வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே அரசதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு
அடுத்தாண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பது
குறிப்பிடத்தக்கது.
பிரதமர் தலைமையிலான பேராளர் குழு பயணம் செய்த விமானம்
உள்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.55 மணிக்கு சியோல் விமானப்
படைத்தளத்தில் தரையிறங்கியது. பிரதமரை தென் கொரிய பொது
விவகார அமைச்சின் பேச்சாளரும் துணையமைச்சருமான லீ ஜேவூங்,
மலேசியாவுக்கான தென் கொரியத் தூதர் இயோ சீயுங் பேய்,
தென்கொரியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ முகமது ஜாம்ருனி
காலிட் ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் அன்வாரின் பயணக் குழுவில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ
முகமது ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர்
டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ருள் தெங்கு அஜிஸ், அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத் துறை அமைச்சர் சாங் லிகாங், ஒற்றுமைத் துறை
அமைச்சர் ஏரோன் அகோ டாகாங் மற்றும் உயர் அரசாங்க அதிகாரிகள்
இடம் பெற்றுள்ளனர்.
பிரதமருக்கு விமானப் படைத்தளத்தில அதிகாரப்பூர்வ வரவேற்பு
நல்கப்பட்டது. தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலின் அழைப்பின்
பேரில் பிரதமர் இப்பயணத்தை மேற்கொள்வதாக ஜாம்ருனி தெரிவித்தார்.
இன்று காலை யோங்சான் அதிபர் அலுவலகத்தில் அதிபர் யூனுடன்
பிரதமர் அன்வார் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்துவார்.
நாளை நவம்பர் 26ஆம் தேதி சியோல் பல்கலைக்கழகத்தில் “சிக்கலான
உலகில் வியூக பங்காளிகள்“ மற்றும் “மலேசியா, கொரியா மற்றும்
ஆசியாவின் எதிர்காலம்“ என்ற தலைப்பில் அவர் சிறப்புரையாற்றுவார்.


