ஷா ஆலம், நவ. 25 - ஆற்றில் நண்டு மற்றும் உம்புன்-உம்புன் எனப்படும்
ஒரு வகை மண்புழுவை பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் படகிலிருந்து
தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் கிள்ளான், கம்போங் ரந்தாவ்
பாஞ்சாங், சாயாங் டி சாயாங் படகுத் துறையில் நேற்று நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று காலை 10.49 மணியளவில் தாங்கள்
புகாரைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் முக்லிஸ் மொக்தார்
கூறினார்.
இதனைத் தொடர்ந்து வடகிள்ளான் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
ஐம்பத்து மூன்று வயதுடைய அந்த மீனவர் படகிலிருந்து தவறி
விழுந்திருக்கக் கூடும் என கருதப்படுவதாகக் கூறிய அவர், அவரது உடல்
கரையிலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் நேற்று பிற்பகல் 1.00
மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது என்றார்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த மீனவர் தனியொருவராகப் படகில் நண்டு
பிடிக்கச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரது உடல் ஆற்றிலிருந்து
மீட்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது
என்றார் அவர்.


