ஈப்போ, நவ. 25 - அரசாங்க பல்கலைக்கழங்களில் குறிப்பாக அதிக தேவை
உள்ள துறைகளில் தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்ப்பு
நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று உயர்கல்வி அமைச்சர்
டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காடீர் கூறினார்.
அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் மாணவர்களுக்கு இடம்
கிடைக்காததை இன விவகாரமாகவோ அல்லது குறிப்பிட்ட தரப்பினருக்கு
எதிராக பாகுபாடு காட்டுப்படுவதாகவோ சித்தரிக்க வேண்டாம் என அவர்
கேட்டுக் கொண்டார்.
அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் மாணவர் சேர்ப்பு நடவடிக்கையில்
நாம் பாகுபாடு காட்டுவதில்லை. மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும்
ஏ தகுதி பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்
என அவர் தெரிவித்தார்.
அடிக்கடி விவாதிக்கப்படும் விஷயங்களில் அவர்களுக்கு முதன்மை தேர்வு
வேண்டும் என்பதுதான். வழக்கமாக, மருத்துவம், மருந்தியல் மற்றும் பல்
மருத்துவம் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளையே அது
உள்ளடக்கியிருக்கும் என்றார் அவர்.
நேற்று இங்கு பேராக் மாநில தேசிய முன்னணியின் பேராளர் மாநாட்டை
முடித்து வைத்தப் பின்னர் தேசிய முன்னணியின் பொதுச்
செயலாளருமான அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
அந்த மூன்று துறைகளுக்கும் வரம்பிற்குட்பட்ட இடங்களே உள்ள
நிலையில் அதற்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை
அதிகமாக உள்ளது என்று ஜாம்ரி கூறினார்.
ஒரு சிலர் கோட்டா அல்லது தங்களுக்கென தனி ஒதுக்கீடுகளை
கோருகின்றனர். எங்களைப் பொறுத்த வரை அந்த முக்கியத்துவம் வாய்ந்த மூன்று துறைகளில் மாணவர்களைச் சேர்ப்பது தகுதி அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, மாநாட்டில் உரையாற்றிய பேராக் மாநில மஇகா தலைவர்
டான்ஸ்ரீ எம்.ராமசாமி, தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சியைப் பெற்ற இந்திய
மாணவர்களுக்கு அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் இடம்
கிடைப்பதில்லை என்ற புகாரை தாங்கள் அதிகம் பெற்று வருவதாகக்
கூறியிருந்தார்.
மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்த மாணவர்களும் இதே பிரச்சனையை
எதிர்நோக்கி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கு தீர்வு காணும்
விதமாக கோட்டா எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்றார்.


