கோலாலம்பூர், நவ. 24- இங்குள்ள பங்சார் சவுத், ஜாலான் கெரிஞ்சியில்
மோட்டார் சைக்கிளோட்டியின் உயிரைப் பலி கொண்டு மேலும்
ஒருவருக்கு காயத்தை ஏற்படுத்திய விபத்து தொடர்பான விசாரணைக்காக
லோரி ஓட்டுநர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முப்பதிரண்டு வயதுடைய அந்த லோரி ஓட்டுநர் கோலாலம்பூர்
போக்குவரத்து போலீஸ் தலைமையகத்தில் நேற்று நண்பகல் கைது
செய்யப்பட்டதாக மாநகர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப்
பிரிவின் தலைவர் ஏசிபி முகமது ஜம்சுரி முகமது ஈசா கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்
கூறினார். அந்த ஓட்டுநர் லோரியை கட்டுமானப் பகுதியில் நிறுத்தி விட்டு அதில்
பிரேக் எண்ணெயை நிரப்பிக் கொண்டிருந்த போது அந்த லோரி திடீரென
பின்னோக்கி நகர்ந்து பிரதான சாலையில் பயணித்துக் கொண்டிருந்த
மோட்டார் சைக்கிளோட்டியை மோதியதாக அவர் தெரிவித்தார்.
அந்த லோரியை தவிர்க்க முடியாத நிலையில் சாலையில் விழுந்த அந்த
மோட்டார் சைக்கிளோட்டி மீது லோரியின் பின்புற சக்கரம் ஏறியதாக
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
அச்சமயம் அதே சாலையில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு
மோட்டார் சைக்கிளோட்டியும் அந்த லோரியினால் மோதுண்டு நெற்றியில்
காயங்களுக்குள்ளானார் என்றார் அவர்.
அந்த ஆடவரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற
ஆணையை தாங்கள் இன்று பெறவிருப்பதாகவும் ஏசிபி முகமது ஜம்சுரி
சொன்னார்.
முன்னதாக, லோரி ஒன்று பின்னோக்கி நகர்வதையும் அதன் காரணமாக
மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து கீழே
விழுவதையும் சித்தரிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடங்களில்
பரவலாக பகிரப்பட்டது.


