(ஆர்.ராஜா)
கிள்ளான், நவ 24- இந்திய சமூகத்தின் உயர்வுக்கு எப்போதும் உதவ எப்போதும் தயாராக இருப்பவர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் புகழாரம் சூட்டினார்.
செந்தோசா தொகுதிக்கும் மாநிலத்திலுள்ள இந்திய சமூகத்திற்கும் மந்திரி புசார் எப்போதும் ஆதரவாக இருந்து வருவதோடு கேட்கும் உதவிகளை தவறாது செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கு ஏதுவாக பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என மந்திரி புசாரிடம் நேற்று முன்தினம் கோரிக்கை வைத்தேன். இந்திய சமூகத்திற்கான திட்டங்கள் தொடர்பில் நாளை (திங்கள்கிழமை) அறிவிப்பை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார்.
நேற்று இங்கு நடைபெற்ற செந்தோசா தொகுதி நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் இந்த நிகழ்வில் சிறப்பு பிரமுகராக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டா
மந்திரி புசார் மாநிலத்தைச் சிறப்பான முறையில் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்து வருவதாகக் கூறிய அவர், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு மிகவும் சிறப்பான முறையில் பதிலளித்து தனது ஆற்றலை நிரூபித்ததாகச் சொன்னார்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கு இந்திய சமூகம் கடுமையாக உழைக்கும் அதேவேளையில் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மொத்தம் 19 உறுப்புக் கட்சிகளை உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கத்தை சிறப்பான முறையில் வழி நடத்தி வரும் பிரதமருக்கு நமது சமூகம் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் குணராஜ் கேட்டுக் கொண்டார்.
இந்த அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால தவணை முடிவுக்கு வர இன்னும் மூன்று ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் தீட்டப்பட்டிருக்கும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் பிரதமருக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அறுசுவை உணவு மற்றும் ஆடல். பாடல், அதிர்ஷ்டக்குலுக்கு உள்ளிட்ட ஜனரஞ்சக நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசு துறைகளின் தலைவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.





