கோத்தா பாரு, நவ. 24- கிளந்தான் மாநிலத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான
சாத்தியம் குறித்த எச்சரிக்கையை வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை
(ஜே.பி.எஸ்.) வெளியிட்டுள்ளது. ரந்தாவ் பாஞ்சாங், சுங்கை கோலோக்கின்
தாழ்வான பகுதிகள் வெள்ள பாதிப்புக்கு உண்டாகும் எனவும் அது
கூறியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வுத் துறையின்
எச்சரிக்கை மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவைத்
தாண்டும் அபாயம் ஆகியவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்
வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும் என்று தேசிய
வெள்ள மற்றும் முன்கணிப்பு மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இதனால் ரந்தாவ் பாஞ்சாங், சுங்கை கோலோக்கின் ஐந்து கிலோ மீட்டர்
சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபயாம்
உள்ளதாக அது குறிப்பிட்டது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து
கணிக்கபட்டதைக் காட்டிலும் முன்கூட்டியே அல்லது தாமதமாக
வெள்ளம் ஏற்படும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ள இடங்களில் வசிப்போர் மிகுந்த
எச்சரிக்கை போக்கை கடைபிடிக்கும் அதேவேளையில் சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் அல்லது துறைகள் வெளியிடும் உத்தரவுகளைப் பின்பற்றி
நடக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


