காஸா நகர், நவ. 24- காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்
தாக்குதலில் மேலும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். கடந்தாண்டு
அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து அங்கு பலியான
ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை இதனுடன் சேர்த்து 189 பேராக
உயர்ந்துள்ளது.
காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறையின்
விரிவுரையாளரும் பத்திரிகையாளருமான வாயேல் இப்ராஹிம் குஃபா
என்பவரே இந்த தாக்குதலில் உயிரிழந்தவராவார் என்று காஸா ஊடக
அலுவலகம் கூறியது.
இந்த படுகொலையை கடுமையாகச் சாடிய ஊடக அலுவலகம், திட்டமிட்ட
இந்த தாக்குதலுக்கு எதிராக அனைத்துலகச் சமூகம் விரைந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.
காஸாவில் நடத்தப்படும் படுகொலைகளை உடனடியாக நிறுத்த
இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும் என்பதோடு இத்தகைய கோரத்
தாக்குதல்களுக்காக அந்நாட்டை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த
வேண்டும் எனவும் அது கேட்டுக் கொண்டது.
காஸா மீது கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல்
மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை 44,000 பேர்
கொல்லப்பட்டுள்ளதோடு சிறார்கள், பெண்கள் உள்பட 104,000 பேர்
காயமடைந்துள்ளனர்.
இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து வரும் இந்த தாக்குதல்கள் காரணமாக
இஸ்ரேல் அனைத்துலக சமூகத்தின் கடுமையான கண்டனத்திற்கு
ஆளாகியுள்ளது. தொடர் தாக்குல்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு
தடை விதிப்பு போன்ற நடவடிக்கைகள் காஸா மக்களை முற்றாக அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை நடவடிக்கையாக கருதப்படுகிறது.


