ஈப்போ, நவ. 24- கெத்தும் பான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின்
பேரில் அறுவரை போலீசார் கைது செய்துள்ளனர். இங்கு, தாமான்
பக்கத்தான் ஜெயாவிலுள்ள வீடொன்றில் போலீசார் மேற்கொண்ட அதிரடிச்
சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இருபத்து நான்கு முதல் 42 வயது வரையிலான அவர்கள் அனைவரும்
நேற்று பின்னிரவு 12.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில்
கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
ஜைனால் அபிடின் அபாங் அகமது கூறினார்.
இந்த சோதனையின் போது பத்து ஐஸ் தோம்புகளில் வைக்கப்பட்டிருந்த
900 லிட்டர் அளவிலான 3,000 கெத்தும் பான பொட்டலங்களும் 350 கிலோ
கெத்தும் இலைகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறிய அவர், இவற்றின்
மொத்த மதிப்பு 41,000 வெள்ளியாகும் என்றார்.
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு ஆடவர்
மெத்தம்பெத்தமின் மற்றும் அம்பெத்தமின் போதைப் பொருளை
பயன்படுத்தியிருப்பதும் மேலும் இருவர் முந்தையக் குற்றப்பதிவுகளைக்
கொண்டிருப்பதும் தெரிய வந்தது என்றார் அவர்.
இக்கும்பல் கடந்த ஈராண்டுகளாக கெத்தும் போதை பான விற்பனையில்
ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்ததாக நேற்று இங்கு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
இந்த கெத்தம் பானங்களை 3,000 போதைப் பித்தர்களுக்கு விநியோகிக்க
முடியும் எனக் கூறிய அவர், அவை ஈப்போ வட்டாரத்திலுள்ள போதைப்
பித்தர்களுக்கு விநியோகிக்கப்படவிருந்தன என்று குறிப்பிட்டார்.
கைதான அனைவரும் 1952ஆம் ஆண்டு மருந்துச் சட்டத்தின் 30(3) வது
பிரிவு மற்றும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின்
15(1(ஏ) பிரிவின் கீழ் விசாரணைக்காக மூன்று நாட்கள் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


