ஷா ஆலம், நவ. 22- கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில்
பாய்மரப் படகு போட்டி இன்று தொடங்கி இம்மாதம் 24ஆம் தேதி கோல
லங்காட், பந்தாய் பத்து லாவுட்டில் நடைபெறவுள்ளது.
பத்தாவது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதுமிருந்து
120 போட்டியாளர்களும் குழு நிர்வாகிகளும் பங்கேற்று பாய்மரப்
படகுகளைச் செலுத்துவதில் தங்களுக்கு உள்ள திறமையை
வெளிப்படுத்தவுள்ளனர்.
இந்த பாய்மரப் படகு போட்டி மொத்தம் 12 பிரிவுகளாக நடத்தப்படுவதாக
நகராண்மைக் கழகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
பல்வேறு இடங்களில் பாய்மரப் படகுளைச் செலுத்தும் அனுபவத்தை
போட்டியாளர்கள் பெறுவதற்கும் கடலில் சவால்மிக்க சூழலில் பாய்மரப்
படகுகளை செலுத்தும் திறனை இளையோர் மத்தியில் அதிகரிப்பதற்கும்
இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாக அது குறிப்பிட்டது.
மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்தப் போட்டிக்கு வருகை தந்து
போட்டியாளர்களுக்கு தங்களின் ஆதரவை புலப்படுத்தும்படி நகராண்மைக்
கழகம் கேட்டுக் கொண்டது.
சிலாங்கூர் பாய்மரப் படகு சங்கத்தின் ஏற்பாட்டிலான இந்த போட்டிக்கு
சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் வாயிலாக சிலாங்கூர் அரசும்
ஆதரவு வழங்கியுள்ளது. மேலும் மலேசிய பாய்மரப் படகு சங்கம் மற்றும்
தஞ்சோங் சிப்பாட் தொகுதி சேவை மையம் ஆகியவையும் இப்போட்டிக்கு
ஏற்பாட்டு ஆதரவை வழங்கியுள்ளன.


