கோலாலம்பூர், நவ. 22- காரில் இறந்து கிடந்த பெண்மணி ஒருவரின்
உடலிலிருந்து தங்கச் சங்கலி மற்றும் கைச் சங்கிலியை திருடியதாக
போலீஸ்காரர் ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் எம்.எஸ். அருண்ஜோதி முன்னிலையில் தமக்கு எதிராக
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை லான்ஸ் கார்ப்ரல் முகமது அலிஃபா சாஃபி
(வயது 35) மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த அக்டோபார் மாதம் 1ஆம் தேதி விடியற்காலை 2.40 மணியளவில்
வங்சா மாஜூ, ஜாலான் ஸ்தாபாக் பிரிமாவில் சாலையோரம் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த காரிலிருந்த 26 வயதான அந்த பெண்ணுக்குச்
சொந்தமான நகைகளைக் திருடியதாக அவருக்கு எதிரான
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஏழாண்டுச் சிறை, அபராதம்
அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின்
379வது பிரிவின் கீழ் அந்த போலீஸ்காரர் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டிற்கு ஜாமீன் வழங்கப்படாது என்பதால் அவ்வாடவருக்கு
ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் விவி அஸ்னித்தா ஜைனால்
அரிபின் நீதிமன்றத்திடம் பரிந்துரைக்கவில்லை. எனினும், நீதிமன்றம்
அவருக்கு ஜாமீன் வழங்க முடிவெடுத்தால் அதிகப் பட்ச ஜாமீன் தொகை
நிர்ணயிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
எனினும், தனது கட்சிக்கார் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளைப்
பராமரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளதால் குறைந்த பட்ச ஜாமீன்
தொகையை நிர்ணயிக்க்கும்படி குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்
ஆர். லாவண்யா நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 3,500 வெள்ளி
ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட், இந்த வழக்கின்
மறு விசாரணையை வரும் ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


