அலோர்ஸ்டார், நவ. 22- பாதுகாவலர் நிறுவனத்திற்குச் சொந்தமான 200,000 வெள்ளி காணாமல் போனது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு மூன்று பாதுகாவலர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று நண்பகல் 12.00 மணியளவில் அலோர்ஸ்டார் காவல் நிலையத்திற்கு வந்த போது 28 முதல் 38 வயது வரையிலான அந்த மூன்று பாதுகாவலர்களும் கைது செய்யப்பட்டதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சைட் பாஸ்ரி சைட் அலி கூறினார்.
இங்குள்ள மெர்கோங் வட்டாரத்தில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் பாதுவாலர் வேனில் இருந்த 200,000 வெள்ளி பறிபோனதாக அந்த மூன்று பாதுகாவலர்களும் தங்கள் புகாரில் கூறியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அம்மூவரும் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான புகார் ஒரு ஜோடிக்கப்பட்ட கதை என்பதை தாங்கள் கண்டறிந்ததாக கூறிய அவர், அம்மூவரையும் கைது செய்து பறிபோன 200,000 வெள்ளியையும் மீட்டு விட்டதாகச் சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் அந்த மூன்று பாதுகாவலர்களையும் விசாரிக்கக் கோரி சம்பந்தப்பட்ட பாதுகாவலர் நிறுவனம் போலீசில் புகார் செய்திருந்தது. அலோர்ஸ்டாரின் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை நாங்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
கைதான அந்த மூன்று சந்தேகப் பேர்வழிகளும் நேற்று தொடங்கி மூன்று நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்த மூன்று பாதுகாவலர்களும் முந்தைய குற்றப்பதிவு எதனையும் கொண்டிருக்க வில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறிய அவர், எனினும் அவர்களில் இருவருக்கு போதைப் பழக்கம் இருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டது என்றார்.


