கோத்தா பாரு, நவ. 22- நேற்று காலை பாசீர் மாஸ் மாவட்டத்தின் ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள சட்டவிரோத மாட் ரோஜி தளத்தில் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல் கடத்தும் முயற்சியை பொது நடவடிக்கைப் படையின் (பி.ஜி.ஏ.) தென்கிழக்கு பிரிவு முறியடித்தது.
நேற்று காலை 11.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஒப் தாரிங் வாவாசான் கிளந்தான் நடவடிக்கையில் 23 மற்றும் 29 வயதுடைய அந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பி.ஜி.ஏ. தென்கிழக்கு படைப்பிரிவின் கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அஸ்ஹான் நிக் அப்துல் ஹமிட் கூறினார்.
இந்த சோதனையின் விளைவாக இரண்டு புரோட்டான் வாஜா ரகக் கார்களில் கொண்டு வரப்பட்ட 420 லிட்டர் பெட்ரோல் கொண்ட பல பீப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட எரிபொருளின் மொத்த மதிப்பு 40,861 வெள்ளியாகும் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
இந்த பெட்ரோல் அண்டை நாடுகளுக்கு கடத்தப்பட இருந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


