ஷா ஆலம், நவ.21- மைசெல் எனப்படும் அடையாள ஆவண மையத் திட்டத்திற்கு கடந்த 2020 முதல் 5,058 விண்ணப்பங்களில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் அவற்றில் 2,178 விண்ணப்பங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் வரை தீர்வு காணப்பட்டுள்ளன.
இக்காலக்கட்டத்தில் பிறப்புச் சான்றிதழ்கள் தொடர்பான 537 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த நிலையில் அடையாள அடையாள அட்டை(414), குடியுரிமை (555), குழந்தை தத்தெடுப்பு (521), குடிநுழைவுத் துறை (119) மற்றும் மாற்றுத் திறனாளி அட்டை (30) ஆகியவை உள்ளதாக வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
இவற்றில் மிக அதிகமாக மலாய்க்காரர்கள் சம்பந்தப்பட்ட 926 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த நிலையில் சீனர்கள் (794), இந்தியர்கள் (547) மற்றும் பிறர் இனத்தினர் (86) உள்ளனர் என அவர் சொன்னார்.
அரசுத் துறைகளுக்குச் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பமும் முழுமையாகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்வதற்கு ஏதுவாக தொடர்புடைய ஆவணங்களை முறைப்படுத்தி தயாரிப்பது மைசெல் அமைப்பின் பணியாகும் என அவர் சொன்னார்
ஒவ்வொரு விண்ணப்பமும் தேசியப் பதிவுத் துறை, உள்துறை அமைச்சு, குடிநுழைவுத் துறை மற்றும் சமூக நலத் துறை போன்ற பல்வேறு தரப்பினரின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப பரிசீலிக்கப்படுகின்றன என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று மைசெல் மூலம் தீர்க்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் வழக்குகளின் எண்ணிக்கை குறித்து கோல குபு பாரு உறுப்பினர் பாங் சாக் தாவ் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அதே சமயம், நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின்படி குழந்தைகளுக்கான குடியுரிமை பெறுவதில் உதவ மைசெல் எப்போதும் தயாராகவும் இருப்பதாகவும் பாப்பாராய்டு தெரிவித்தார்.
இருப்பினும், எந்தவொரு விண்ணப்பத்திற்கும் ஒப்புதலை வழங்கும் அதிகாரம் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.


