கோலாலம்பூர், நவ. 21: நாடு முழுவதும் சர்க்கரை பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தால் (KPDN) செயல்படுத்தப்பட்ட 'ஜோம் கோசோங்' பிரச்சாரம் பிரபலமடைந்து வருகிறது.
இந்த பிரச்சாரத்தில் உணவக நிறுவனங்கள், உணவு மற்றும் குளிர்பான வளாகங்கள் போன்ற மூலோபாய பங்காளிகள் மற்றும் மலேசிய சிறு மற்றும் நடுத்தர தொழிற் சங்கம் (செமெந்தா), மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (Presma) போன்ற சங்கங்கள் இணைந்து செயல் படுவதாக துணை அமைச்சர் ஃபுசியா சாலே கூறினார்
"இரண்டு நாட்களுக்கு முன்பு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு உடன் `Tealive `ஜோம் கோசோங் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. இதில் Secret Recipe 360 அவுட்லெட்கள் உள்பட 1,000 விற்பனை நிலையங்கள் ஈடுபட்டுள்ளன.
"மேலும், சஹாபத் தொம்யாம் பிரிஹாத்தின் போன்ற பிற சங்கங்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ரெஸ்டோரன் இந்தியா மலேசியாவும் ஈடுபடுவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்," என்று அவர் இன்று மக்களவையில் வாய்மொழி கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.
உணவு மற்றும் பானங்களில் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதற்கான உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் நடவடிக்கை குறித்து ஜிம்மி புவா வீ தீசே (தெபுராவ்) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்
– பெர்னாமா


