ஷா ஆலம், நவ. 21- வர்த்தக அனுமதிகளை அந்நிய நாட்டினர்
முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க உள்நாட்டினருக்கு குறிப்பாக,
அந்நிய நாட்டினரை திருமணம் செய்தவர்களுக்கு வர்த்தக லைசென்ஸ்
வழங்குவது தொடர்பில் சட்டத்தை இயற்ற மாநில அரசு தயாராக உள்ளது.
இத்தகைய முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளை மாநில அரசு
உணர்ந்துள்ளதாகக் கூறிய ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம், இதனைக் கையாள்வதில் ஊராட்சி
மன்றங்கள் சிரமத்தை எதிர்நோக்குவதோடு பல்வேறு துறைகளின்
ஒத்துழைப்பும் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
போலியான காதலாக அல்லது வர்த்தக வாய்ப்புக்காக ஏற்படுத்தப்படும்
திருமண பந்தமாக இதனைக் கருதுகிறோம். இது உண்மையான காதல்
கிடையாது. இத்தகையச் செயல்கள் உண்மையாகவே நடக்கின்றன. சில
வேளைகளில் அமலாக்க நடவடிக்கைகளை எடுப்பது சிரமமானதாக
உள்ளது என்றார் அவர்.
நாம் வர்த்தக வளாகத்திற்குச் சென்றால் அதன் லைசென்ஸ்
உள்நாட்டினராக இருக்கும் மனைவியின் பெயரில் உள்ளது. ஆனால்,
பின்னால் அந்நிய நாட்டினர் வர்த்தகத்தை வழி நடத்துகின்றனர். இதனைக்
களைவதற்கான சட்டத்தை இயற்றுவதற்கான தேவை உள்ளது. ஆனால்
அது குறித்து விவாதிக்கப்பட வேண்டியுள்ளது என அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் இவ்வாறு
கூறினார். ஸ்ரீ செர்டாங் தொகுதி உறுப்பினர் அப்பாஸ் அஸ்மியின்
துணைக் கேள்விக்கு பதிலளித்த இங், நாட்டின் குறிப்பாக சிலாங்கூரின்
பொருளாதார வளர்ச்சி இம்மாநிலத்தை அந்நிய நாட்டினரின் சொர்க்க
பூமியாக ஆக்கியுள்ளது என்றார்.
அவர்கள் விருப்பம் போல் இங்கு வந்து வருமானத்திற்கான வழியைத்
தேடிக் கொள்கின்றனர். உள்ளுர் மக்களுடன் பிணைந்து விட்ட
அவர்களுக்கு இது கவர்ச்சிகரமான இடமாக விளங்குகிறது என்று அவர்
மேலும் சொன்னார்.
அந்நிய நாட்டினருக்கு வாடகைக்கு விட்ட குற்றத்திற்காக இதுவரை 32
வர்த்தக உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளத் தகவலையும் அவர்
வெளியிட்டார்.


