கோலாலம்பூர், நவ 21: நேற்று இரவு புத்ராஜெயாவில் உள்ள ஷோப்பிங் சென்டர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட மூவர் உயிரிழந்தனர், மற்றொரு கர்ப்பிணிப் பெண் பலத்த காயமடைந்தார்.
உயிரிழந்தவர்கள் நூருல்ஹுதா ரம்லி (41), அமிசான் சபீ (27), முகமட் டேனியல் முகமட் நுசி (24), மற்றும் பலத்த காயமடைந்தவர் நிஜாசுஹானா உஜாங் (28) என அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனே சைபர்ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) சிலாங்கூர் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
"நான்கு நபர்கள் பயணித்த பெரோடுவா விவா கார் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது. மேலும் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டு உடல்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
“மற்றொரு கர்ப்பிணிப் பெண் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காகப் புத்ராஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்,” என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
– பெர்னாமா


