கோல திரங்கானு, நவ. 21- திரங்கானு மாநிலத்தில் வெள்ள நிலைமையில்
எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நேற்றிரவு 2,581 பேராக இருந்த
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி
நிலவரப்படி 2,579 ஆகப் பதிவானது.
கெமமான் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 641 குடும்பங்களைச்
சேர்ந்த 2,566 பேர் ஐந்து வெள்ள நிவாரண மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக திரங்கானு மாநில பேரிடர் மேலாண்மை
செயல்குழுவின் செயலகம் கூறியது.
மாராங்கில் உள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில் நான்கு
குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் அடைக்கலம் நாடியுள்ளதாக அது
தெரிவித்தது.
இதனிடையே, தும்பாட் ஆற்றின் கம்போங் பத்து கெமாசிக், கெமமான்
ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளதாக
வெள்ளத் தகவல் அகப்பக்கம் குறிப்பிட்டது.
சுங்கை திரங்கானு, சுங்கை தெர்சாட், சுங்கை தெலேமோங், சுங்கை
சாலோக், சுங்கை நெனாஸ் ஆகிய ஆறுகளில் நீர் மட்டம் எச்சரிக்கை
அளவில் உள்ளது.
வெள்ள ஆபத்து நிறைந்த பகுதிகளில் வசிப்போர் எந்நேரமும்
எச்சரிக்கையுடன் இருக்கும் அதேவேளையில் அதிகாரிகளின்
உத்தவுகளைப் பின்பற்றி நடக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


