தங்காக், நவ. 21- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எண்மர் பயணம் செய்த கார்
டிரெய்லர் லோரியுடன் மோதியதில் மூன்று வயது ஆண் குழந்தை
உயிரிழந்ததோடு காரிலிருந்த இதர எழுவரும் காயங்களுக்குள்ளாயினர்.
இவ்விபத்து வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) தெற்கு நோக்கிச்
செல்லும் தடத்தின் 148.1வது கிலோ மீட்டரில் புக்கட் காம்பிர் அருகே
நேற்று மாலை நிகழ்ந்தது.
புரோட்டோன் ஈஸ்வரா மற்றும் டிரெய்லர் லோரி சம்பந்தப்பட்ட இந்த
விபத்து தொடர்பில் நேற்று மாலை 2.59 மணியளவில் தாங்கள் புகாரைப்
பெற்றதாக புக்கிட் காம்பிர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின்
நடவடிக்கை கமாண்டர் ஜொஹாரி சுக்கோர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஆறு தீயணைப்பு வீர்ர்களை உள்ளடக்கிய குழு
தீயணைப்பு வண்டியில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர்
தெரிவித்தார்.
இந்த விபத்தில் மூன்று வயது ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே
உயிரழந்தது உறுதி செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
மேலும் அக்காரில் பயணித்த மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும்
மூன்று சிறார்களை உள்ளடக்கிய எழுவர் இவ்விபத்தில் காயமடைந்தனர்
என்று அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச்
செல்லப்பட்டதாக நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர்
கூறினார்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரியின் ஓட்டுநர் காயமின்றி
உயிர்த்தப்பியதாக அவர் சொன்னார்.


