(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 21- ரவாங் நகரிலுள்ள வெல்மன் சாலையை லிட்டில்
இந்தியாவாக பிரபலப்படுத்துவதற்கான பரிந்துரையை அத்தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் மாநில சட்டமன்றத்தில்
முன்வைத்துள்ளார்.
அந்த சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு
கண்டு போதுமான அளவு கார் நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தித்
தருவதன் மூலம் ரவாங் லிட்டில் இந்தியா பகுதியை தரம் உயர்த்தலாம்
என அவர் ஆலோசனை கூறினார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று 2025ஆம் ஆண்டிற்கான விநியோக
மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
லிட்டில் இந்தியா பகுதியை தரம் உயர்த்துவதன் மூலம் அதிகமான
சுற்றுப்யணிகளை ஈர்ப்பதற்கும் வட்டார பொருளாதாரத்திற்கு
புத்துயிரூட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதோடு அப்பகுதியில்
இந்தியப் பாரம்பரிய அடையாளங்களை தொடர்ந்து நிலை நிறுத்தவும்
இயலும் என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்
ஒன்றாக ரவாங் நகரம் விளங்குகிறது. இந்நகரிலுள்ள இந்த வெல்மன்
சாலையில் உணவகங்கள், மளிகைக் கடைகள், பூக்கடைகள், வழிபாட்டுப்
பொருள் விற்பனை மையங்கள் உள்பட இந்தியர்களுக்கு சொந்தமான
ஏராளமான வணிக வளாகங்கள் காணப்படுகின்றன.


