பாசீர் மாஸ், நவ. 20 - ஆர்ஜிதம் செய்யப்படாத வழிகளில் குறிப்பாக
ஆற்றைக் கடந்து அண்டை நாட்டிற்கு செல்வதைத் தவிர்க்கும்படி பொது
மக்களை அறிவுறுத்தும் அறிவிப்பு பலகைகளை பொது தற்காப்பு படை
(பி.ஜி.ஏ) மலேசியா-தாய்லாந்து எல்லையிலுள்ள சட்டவிரோத தளங்களில்
குறிப்பாக சுங்கை கோலோக்கில் நிறுவியுள்ளது.
அரசு பதிவேட்டில் இடம் பெறாத நுழைவாயில்கள் வாயிலாக
தாய்லாந்து-மலேசிய எல்லையைக் கடப்பது 1959/63ஆம் ஆண்டு
குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றம் என வாசகம் அந்த அறிவிப்பு
பலகைகளில் இடம் பெற்றுள்ளதாக தென்கிழக்கு பிராந்திய பி.ஜி.ஏ.
கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அஸ்ஹான் நிக் அப்துல் ஹமிட் கூறினார்.
இக்குற்றங்களைப் புரிவோருக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம்,
ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க
இச்சட்டப் பிரிவு வகை செய்கிறது என்று அவர் பெர்னாமாவுக்கு அளித்த
பேட்டியில் கூறினார்.
ஆகவே., கோலோக் நகருக்குச் செல்ல விரும்புவோர் ரந்தாவ் பாஞ்சாங்கில்
உள்ள குடிநுழைவு, சுங்க தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு சாவடி
வழியாக செல்லும்படி அவர் அறிவுறுத்தினார்.
இதனிடையே, சுங்கை கோலோக் ஆற்றோரங்களில் இந்த அறிவிப்பு
பலகைகளை பி.ஜி.ஏ. உறுப்பினர்கள் நிறுவுவது பெர்னாமா மேற்கொண்ட
ஆய்வில் தெரியவந்தது.


